search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மந்திரிகள்"

    ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். #ChandrababuNaidu #Minister #AndhraPradesh
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. அதனை தொடர்ந்து, மாநில ஆட்சியில் கூட்டணி வகித்து வந்த பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியது.

    இதன் காரணமாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மந்திரி சபையில் பதவி வகித்து வந்த பா.ஜ.க. மந்திரிகள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரூக் மற்றும் கிடாரி ஷ்ரவன் குமார் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

    பரூக், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவ் மற்றும் தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகிய 2 பேரின் மந்திரி சபையிலும் ஏற்கனவே மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். அதோடு ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

    28 வயது என்ஜினீயரான கிடாரி ஷ்ரவன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவின் மகன் ஆவார். இவர் ஆந்திர சட்டசபையில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×